குமரி கண்டம் இருந்ததற்கான சங்க கால ஆதாரம்
சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் தமிழகத்துத் துறைமுகங்கள் பல நீருக்கு உணவானது. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதிகள் இருந்ததாகவும் அதைக் கடல்கோள் கொண்டு போனதென்றும் புவியியலார் கருதுகின்றனர். அந்நிலப்பகுதி எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று உறுதியாக அறிய முடியவில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் பல கடல் கோள்கள் நிகழ்ந்திருக்கிறது. கடல் கொண்டு போன அத்தென்னிலப் பகுதிக்குக் குமரிக் கண்டம் என்றொரு பெயருண்டு. குமரிக் கண்டத்தைப் பற்றியக் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும், உரைகளிலும் அகச்சான்றுகளாக காணப்படுகின்றன.
பாண்டிய மன்னன் ஒருவர் ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள, வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட‘தாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
அதாவது, இப்பாண்டியனின் நாடு குமரி முனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு பரவியிருந்துள்ளது. அந்நாட்டில் பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கடல் கொண்டு போயிற்று, இதனால் தன் நாட்டின் பரப்பானது சுருங்கிக்வட்டது. தென்பால் கடல் மண்டிவிட்டதால் பாண்டிய மன்னன் வடபால் தன் நோக்கத்தைச் செலுத்தினான். வடக்கில் படைகளை செலுத்திச் சென்று இழப்புக்குள்ளான பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும், குமரிக்கோட்டுக்கு ஈடாக இமயத்தையும் கைக்கொண்டான்.இச்செய்தியைப்பற்றியக் குறிப்பு ஒன்று முல்லைக் கலியிலும் காணப்படுகின்றது. ‘மலை திரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின், மெலிவின்றி மேற்சென்று மேலார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த இளர் கெண்டை வலியினால் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்’ என்று ஆசிரியர் சோழன் நல்லுருத்திரனார் கூறுகின்றார்.
கடல்கோள்களுக்குட்பட்டு மூழ்கிப்போன நிலப்பகுதிக்கு ‘லெமூரியா கண்டம்‘ என்று பெயரளிக்கப்பட்டுள்ளது.
வால்டர் ராலே, பேராசிரியர் ஹெக்கல், சர். ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட்,சர். ஜே. டிபிள்யூ, ஹோல்டர்னஸ் ஆகிய ஆய்வாளர்கள் இந் நிலப்பகுதி ஒன்று பண்டைய காலத்தில் இருந்ததென்று ஒப்புக்கொண்டு அஃதுடன், இங்குதான் மக்க ளினமே முதன்முதல் உலகின்மேல் தோன்றிற்று என்றும் கூறி ‘லெமூரியக் கொள்கை‘யை உருவாக்கினர்.