தமிழர்களின் பாரம்பரியமான ஏறுதழுவுதல்
கிபி 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவுதல் வழக்கத்தில் இருந்ததற்கு ஆதாரமாக புதுடெல்லியில் உள்ள தேசிய கண்காட்சியில் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
சோழர்கால ஏறு தழுவுதல்
சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில், அமராவதி ஆற்றுப்படுகையில், சங்க காலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது. காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது. காசின் வடிவம் நீள் சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.
காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது என்று கூறினார். இதுபோல் பல்லவர்கள், சம்புவராயர்கள், சோழர்கள் காலகட்டத்திலும் மாடுகளின் முக்கியத்துவம் உணர்ந்து நாணயங்களில் அதன் உருவங்கள் குறித்து பயன்படுத்தப்பட்டன என்று தெரிவித்தார்.
15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஏறு தழுவுதல் நடுகல்.தமிழர் பாரம்பரியம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன் பாளையம் கருமந்துறையில் இருந்து, இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள ஏறுதழுவல் வீரக்கல் கல்வெட்டு செய்தி…
கோவுர்ச்சங்கன்
கருவந்துறையி
லே எருதுவிளை
யாட்டே பட்டான்
தங்கன் மகன் பெ
ரிய பயலு நட்ட க
ல்லு..
இதில் மாட்டின் உருவமும் அருகில் வீரனும் இருப்பார்கள். கோவூர் சங்கன் என்பவர் ஏறுதழுவுதலில் இறந்துவிடுகிறார். அவருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.கருவந்துறை அதாவது கல்வராயன் மலை கருமந்துறை என்னும் ஊரில் கோவூர் சங்கன் என்பவர் ஏறு தழுவல் விளையாடி அதில் இறந்து விடுகிறார். அவனது மகன் தனது தந்தைக்கு எடுத்த நடுகல்லாக ‘சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு‘ என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
ஏறுதழுவுதல் எந்த திணைக்குரியது?
குறிஞ்சி,முல்லை நில மக்கள் தங்கள் நிலங்களில் உள்ள வலிமையான காளை மாடுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். காளையின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,
‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’ (மலை.330-335)
என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
முதல்நாள் குரவைக்கூத்து நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவுதல் முடிந்து மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.