தல வரலாறு தலச் சிறப்பு
அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் கஞ்சமலை, சேலம் மேற்கு வட்டம், சேலம் மாவட்டம். காலிங்கநாதர் கோவில்
கஞ்சமலை பெயர் விளக்கம் :
அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இடம் கஞ்சமலைத் தொடரின் அடிவாரம். கஞ்சம் என்ற சொல்லுக்கு பொன், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உண்டு. இம்மூன்று பொருள்களும் இங்கு (இம்மலைக்கு) பொருந்தும்.
கஞ்சம் என்பதற்கு முதல் பொருள் பொன் என்பதாகும். பராந்தக சோழன் தில்லைக்குப் பொன் ஓடு வேய்ந்தான் என்பது வரலாறு. ஆனந்தக் கூத்தாடும் பெருமானுக்குத் தங்க நிழல் (தங்கத்தாலான முகடைத்) தந்தது கஞ்சமலை. கஞ்சமலைப் பொன்னைக் கொண்டே பராந்தக சோழன் தில்லைக்குப் பொன் வேய்ந்து அதனை பொன்னம்பலம் ஆக்கினான்.
இத்திருக்கோயிலுக்கு அருகில் இம்மலையில் ஓடும் அருவி ஒன்று உள்ளது. இந்த அருவிக்கு பொன்னிநதி என்றும் ஒரு பெயர் உண்டு. இந்நதியில் உள்ள மணலைக் கரைத்து பொன்தாது எடுத்துள்ளனர்.
இத்திருத்தலத்திற்கு அருகில் பொன் செய்த இடம் பொன்னகர் என்றும் இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழுமாத்தானூர் என்றும் வழங்கப்பெற்றுள்ளது. இவற்றுள் ஏழுமாத்தானூர் என்னும் ஊர் இன்றளவும் அதே பெயரில் இருந்து வருகிறது.
கஞ்சம் என்பதற்கு இரண்டாவது பொருள் இரும்பு என்பதாகும்.
கஞ்சலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாது மிகுந்துள்ளது. இம்மலைப் பாறைகளில் கருத்த இடங்கள் அனேகம். இவற்றில் காந்தத்தை வைத்தால் பிடித்துக்கொள்ளும். இக்கஞ்சலையின் இரும்புத் தாதுவை அடிப்படையாகக் கொண்டுதான் சேலம் இரும்பாலை (உருக்காலை ) இத்திருத்தலத்திற்கு மிக அருகில் அமைக்கப்பட்டது என்பது அண்மைக்கால வரலாற்று சான்று. மாவீரன் அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) மன்னன் பரிசளித்த வாள் இக்கஞ்சமலை இரும்பினால் செய்யப் பெற்றது என்ற ஒரு வரலாற்றுச் செய்தியும் வழங்கப் பெறுகின்றது.
கருமை நிற மூலிகைள் மற்ற மூலிகைகளை விட மருத்துவ குணம் மிக்கவை. கருமை படர்ந்த மூலிகைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது தாவர நூலார் துணிபு. இக்கஞ்சலைக் காட்டினுக்கு கருங்காடு என்று ஒரு பெயர் உண்டு. இக்கருங்காட்டில் கருமை நிற மூலிகைகள் ஏராளமாக உள்ளன.
கருநெல்லி மரம்
பதினைந் தெனுஞ்சந்தி பாதஞ் தயக்கம் மதிநைந்தி டச்செய்வினை மாறும் – பதியிற் சந்த்த கருவுறுவந் தானும்வே றாகுத் தனித்தகரு நெல்லிமரத் தால்.
குணம் :- (இதன் பொருள்) கருநெல்லி மரத்தினால் பதினைந்து வகை சந்நிபாதங்களும், மயக்கமும், மனோவியாதியும் நீங்கும் காயசித்தியுண்டாகும் என்க.
கஞ்சம் என்பதற்கு தாமரை என்பது மூன்றாவது பொருள். கஞ்சன் என்பது பிரம்மதேவன் பெயர்களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்தால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று. கஞ்சனால் (பிரம்மனால்) உண்டாக்கப்பட்ட மலை கஞ்சமலை ஆயிற்று.
இக்கஞ்சமலை கஞ்சனால் (பிரம்மனால்) உண்டாக்கப்பட்டது பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் கரபுரநாதர் புராணம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
முன்னோரு காலத்தில் கோரக்கர், கருவூர்ச்சித்தர், கொங்கணர், அகப்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் எனும் சித்தர்கள் கற்ப மூலிகையை எங்கு தேடியும் கிடைக்காமையால் கஞ்சன் என்று பெயர் பெற்ற பிரம்மதேவனை நோக்கித் தவம் செய்தனர். அத்தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவன் அவர்கள் முன்தோன்றிச் சகலவிதமான மூலிகைகளும் நிறைந்து இருக்கும் ஒரு மலையைச் சிருட்டித்துத் தருவதாகவும், இம்மலையின்கண் உள்ள காட்டிற்கு கருங்காடு என்று பெயர் விளங்கும் என்றும், இக்கருங்காட்டின்கண் கருநெல்லிமரம், வெள்ளைச்சாரணச் செடி, நிழல் சாயாமரங்கள், இரவில் ஒளி வீசம் ஜோதி விருட்சங்கள், உரோமத்தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவிகள் மற்றும் ஆயுதங்களால் உண்டான புண்ணை ஆற்றும் சல்லியகரணியும், ஒடிந்த உறுப்புகளை இணைக்கும் சந்தான கரணியும், புண்களை ஆற்றுவித்துச் சிறந்த உருவம் வழங்கும் சாவல்யகரணியும், உடலை விட்டகன்ற உயிரை மீட்கும் அமுத சஞ்சீவி கரணியும் இன்னும் எண்ணற்ற சித்கற்ப மூலிகைகள், வேர், கொழுந்து, கிழங்கு என நிரம்பி இருக்கும் என்றும் அம் மூலிகை வழி நீங்கள் கற்ப மருந்தினைச் செய்து உண்டு சிறக்கலாம் என்றும் அருளிச் செய்தார் என்று கரபுரநாதர் புராணச் செய்து கூறுகிறது.
மேற்கண்ட புராணச் செய்தியைப் புராணம் என்று அடியோடு மறுப்பதற்கில்லை. ஏனெனில் இம்மலையில் விளைந்த கருநெல்லிக் கனிதான், நரை, திரை, மூப்பு நீக்கும் சாவா மருந்தென்று தகடூரை (தர்மபுரி)த் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் என்ற மன்னனால் ஒளவைக்கு அளிக்கப்பட்டது என்பது அண்மைக்கால வரலாற்றுச் செய்தியாகும். தகடூரைத் (தர்மபுரி) தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் என்ற மன்னனின் கட்டுப்பாட்டில் இக்கஞ்சமலை அக்காலத்தில் இருந்துள்ளது.
இத்திருத்தலம் அமைந்துள்ள கஞ்சம்மலைக்கு மேற்கண்டவாறு எண்ணற்ற சிறப்புக்களைப் பெற்றுள்ளது. இக்கஞ்சமலைக்குச் சஞ்சீவிமலை என்பன போன்ற பெயர்களும் வழங்கப் பெறுகின்றன.