1.பழனித்தல வரலாறு
படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே
கந்தரலங்காரம்
திருமலையின் சிறப்பு
திருவருள் ததும்பியது தமிழகம். இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள்ளே தொன்மைச் சேரனும், தென்னவனாகிய பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு வைகாவூர் நாட்டுப் பழம் பதியாகிய பழனி காலவரையறைக்குட்படாத பழமையும், பெருமையுமுடையது. இன்னும், தமிழ் இலக்கியங்களில் “சித்தன் வாழ்வு” எனச் சிறப்பிக்கப் பெற்றது. மலைமேல் மருந்தாகிய ஞானதண்டாயுதபாணியின் அருள் திருமேனியை நிர்மாணித்த காலம் காலவரையறையில் அகப்பட்டதன்று. அத்திருமேனியைத் தரிசித்த பேறு மக்களின் பிறவிப்பணியையகற்றி உலகப் பெரும்பேற்றில் இன்றும் என்றும் ஈடுபடுத்துவது.
திருமலையின் அமைப்பு
பழனிப் பொருப்பினின்றும் சுமார் நான்கு கி.மீ தூரத்தில் மேற்கு மலைத்தொடரி ஒரு பகுதியாகிய கொடைக்கானல் மலையும் மற்றும் பலமலைத்தொடர்களும் பச்சைப் பசேலெனத் தோன்றி வெள்ளிய முகில்கள் மேலே தவழ்வனவாய் விளங்குகின்றன. இப்பழனிமலைக்குச் சிறிது அணித்தே மற்றுமோர் சிறு குன்று இடும்பன் மலை எனப் பெயர் பெற்று நிற்கின்றது. இவை கடல் மட்டத்திற்கு மேல் 1068 அடி உயர்ந்துள்ளவை. இதனையடுத்து இடும்பன் குளம் 147 ஏ.61 செ. நிலப்பரப்புள்ளது. பழனிமலையின் உச்சியில் அதன் மணிமுடி போல் முருகன் திருக்கோயில் விளங்குகின்றது.