இரண்டாம் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட இடம் கபாடபுரம். இந்தச் சொல்லை கவனமாக ஆராய்ந்தால் இது ஊரின் பெயரல்ல, ஒரு பகுதியின் பெயர் என்பது புலப்படும். யூபிரிடீஸ் (பஃருளி) மற்றும் டைகிரீஸ் (குமரி ஆறு), இவை இரண்டும் பாஸ்ரா நகருக்கு அருகே ஒன்றாக இணைந்து, பின் ஷட்-அல்-அரப் என்ற நதியாகப் பாய்கின்றன. இதன் அமைப்பு ஆங்கில எழுத்தான ஒய் (Y) என்ற வடிவில் உள்ளது.
யூபிரிடீஸ் இடதுகரமாகவும் டைகிரீஸ் வலதுகரமாகவும், ஷட்-அல்-அரப் செங்குத்தான கோடாகவும் அமைந்துள்ளன. இத்தகைய வடிவத்துக்கு தமிழில் கவடு என்று பெயர். கவட்டையை (உன்டிகோல்) வைத்து விளையாடாத தமிழ்ச் சிறுவனும் உண்டா?
கவடு போன்ற வடிவத்துக்கு இடையே அமைந்திருந்ததால் அப்பகுதிக்கு கவாடபுரம் என்ற பெயர் வழங்கப் பெற்றது.
கபாடபுரம் என்ற பெயரைச் சூட்டியதன் மூலம் நமது முன்னோர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் புவியியல் அமைப்பை நமக்கு உணர்த்திச் சென்றுள்ளார்கள். சுமேரியாவைக் குறிப்பிடும்போது கிரேக்கர்கள் மெசபடோமியா (இரு நதிகளுக்கு உட்பட்ட நிலம்) என்று அதன் புவியியல் அமைப்பைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சரி, கபாடபுரம் என்பது ஒரு பெரும் நிலப்பகுதி என்றால்,இரண்டாம் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற நகரத்தை நாம் அடையாளம் காண்பது எப்படி? இறையனார் அகப்பொருளில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற நகரின் பெயர் கபாடபுரம்.
அது குமரி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது என்று காண்கிறோம். பஃருளியும் குமரி ஆறும் ஒன்றாகச் சேருமிடத்தில் கவடு வடிவம் முழுமை பெறுவதால், அந்த இடத்தில்அமையப்பெற்ற நகரத்துக்கும் கபாடபுரம் என்ற பெயர் வழங்கி இருக்கலாம்.
இன்னொரு விதமாகவும் இதனை ஆராயலாம். பஃருளி நதியின் கரையில் நகரங்களை அமைத்தபோது முதலில் தென்கோடியில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல வடக்கே நகரங்களை உருவாக்கினார்கள். தென்கோடியை ஏன் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்? அங்கிருந்து கடல் மிக அருகில் உள்ளமைதான் காரணம்.
அயல் நாட்டு வாணிகம்தான் சுமேரியர்களின் பொருளாதார முதுகெலும்பு. அதேபோல் குமரி ஆற்றின் (டைகிரீஸ்) கரையில் நகரங்களை அமைக்கும்போது தென் கோடியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இதன் அடிப்படையில் மிகப் பொருத்தமான நகரம் என்றால் பண்டைய சுமேரிய நகரமான லாகாஷ் (Lagash) என்பதுதான் கபாடபுரமாக இருந்திருக்கவேண்டும். கவடு வடிவம் பூர்த்தியாகும் இடமாகவும் கடலுக்கு அருகிலும் இது அமைந்திருக்கிறது.
இதன் இன்றைய பெயர் டெல் அல்-ஹிபா (Tell alHiba). கபாடபுரம் என்பது இதன் அடைமொழியாகவும் இருக்கலாம்.