மகாபாரத போரில் சேர அரசர் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இருந்ததற்கான ஆதாரம்😳
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
சேரலாதன் என்பது சேர வேந்தரின் குடிப்பெயர் ஆகும். குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னர்களுள் இவரே பழைமையானவராக கருதப்படுகின்றார்.
சேரலாதன் என்பது சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படுகிறது, எனவே சேரமான் ஆதன் என்பவரின் வழிவந்தவரே சேரலாதன் என்ற பெயருடையோர் ஆவர்.
பதிற்றுப்பத்தில் முதலாம் பத்திற்குரிய சேரமன்னன் பெருஞ்சோற்று தியன் சேரலாதனே என்பர். புறநானூற்றின் இரண்டாவது பாடல் இவரைப்பற்றியதாகும். முரஞ்சியூர் முடிநாதர் என்னும் புலவர் இவரை பாடியுள்ளார். இப்பாட்டு மகாபாரதப் போர் நடந்த காலத்துப் பாண்டவர் கௌரவர் ஆகிய இருதிறத்துப் படையினர்க்கும் பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது. அப்பகுதி வருமாறு:
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். புறம்; 2:13.16.
“அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொரு போர்களத்தின்கட்படுந் துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை படைக்கும் வரையாது வழங்கினோய்”
இவ்வுரைகாரர் கூற்றையே உண்மையெனக் கொண்டு சிலர் இச்சேரவேந்தன் மகாபாரத காலத்தவர் என்றும், பாரத வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் இவரே என்றும், இவர் கொடைச்செயலைச் சிறப்பித்துப் பாடிய முரஞ்சியூர் முடிநாதரும் மகாபாரத காலத்தவர் என்றும் கருத்துக்குன்றனர்.
அறிஞர் சிலர், செங்குட்டுவன் பாட்டனாகிய உதியஞ் சேரலாதன் பாரத காலத்தவனாதற்கு இயைபின்மையால், பெருஞ்சோற்றுதியன் வேறு,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தந்தையும், செங்குட்டுவனுடைய பாட்டனுமாகிய உதியஞ் சேரல் வேறு என்றும் கூறுவர்.
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை அகம்; 233: 7-9.