கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தூர் அருகில் கங்காவரம் என்ற ஊர் இருக்கிறது அந்த ஊரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துக் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.
நானும் என்னுடைய நண்பன் சிவராஜ் இரண்டு பேரும் சேர்ந்து இந்த களப்பணியில் ஈடுபட்டோம் . 17 வருடத்திற்கு முன்பு கங்காபுரம் என்ற ஊர் இப்போது கங்கவரம் என்று திரிந்துள்ளது.
அனுகோடியூர் செல்லும் சாலையில் ஒரு மாந்தோப்பு உள்ளே இந்த நடுக்கல் இருக்கிறது.
இரண்டு பக்கமும் நடுக்கல் இருக்கிறது
நடுகல்:
இந்த நடுகலின் சிறப்பு என்னவென்றால் எதிரியின் தலை வீரனின் கையில் பிடித்து இருப்பது போல் இங்க மட்டும் தான் இருக்கிறது, வேறு எங்கும் கிடையாது. வீரனின் கையில் வாள் உள்ளது. வீரனின் இடுப்பிலும் அவருடைய கால்களிலலும் அம்பு துளைத்து இருக்கிறது. எதிரியோட தலை அவரின் கையில் உள்ளது. இன்னொரு மனித உருவம் பெரிய வில் வைத்துக்கொண்டு அம்பை எய்வது போல் உள்ளது, இந்த அம்புதான் வீரரின் இடுப்பிலும் கால்களிலும் பாய்ந்தது போல் சிற்பம் அமைந்துள்ளது. இந்த வீரரின் பக்கத்தில் குதிரை ஒன்று உள்ளது இந்த வீரர் பயன்படுத்திய குதிரையாக இருக்கலாம். குதிரையின் பக்கத்தில் பெண் உருவம் ஒன்று உள்ளது அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம், ஏனென்றால் அப்பெண்ணின் கையில் கல் குடுவை ஒன்று உள்ளது. இவ்வீரன் இறந்தவுடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறி இருக்கலாம்.
இதற்குக் கீழ் இரண்டு உருவங்கள் பொறிக்கப்பட்டு அவை பல்லக்கு தூக்கி செல்வது போல் உள்ளது. சின்ன உருவம் ஒன்று யாத்திரை செல்வது போல் உள்ளது. இந்த நடுகல்லில் மொத்தம் ஒன்பது சிற்பங்கள் உள்ளது தலையும் உடலும் தனியாக எண்ணியுள்ளேன். தலையை எண்ணாமல் விட்டால் எட்டு சிற்பங்கள் இருக்கும். வீரனின் கை காது கழுத்தில் அணிகலன்கள் உள்ளது. வீரனின் காதுகளில் குண்டலம் உள்ளது எதிரி நாட்டு வீரனின் காதிலும் குண்டலம் உள்ளது.
கல்வெட்டு:
ஒன்பது வரி உடைய கல்வெட்டு முதல் வரியில் ஸ்ரீ கோப்பரகேசரி என்று ஆரம்பிக்கிறது, இது முதலாம் இராஜேந்திரனின் பட்டப்பெயர்.
இந்த கல்வெட்டின் வரிகள், “ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோப்பரகேசரி உடையார் ஸ்ரீ சோழருக்கு யாண்டு இருவத்தி நாலாவது நிகரிலி சோழ மண்டலத்து தகடூர் நாட்டு ஏயிநாட்டு நாட்டு காமுண்டன் அதிப அதிப் பேலையன் வீரன் நக்குடையாந்து ராஜ சோழன் காமுண்டன் ஏய்நாட்டு மிரவபிள்ளி திருப்பேரு ஏரி மாடு நிலத்துவை பங்கள நாட்டு ஆச்சரி உள்ளிட்ட மாடபயிரை கொள்ள மாடு மீட்டு ஊர் அழியபட்டார்”.
பொருள் :
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் காமுண்டன் என்ற வீரன் தன் நாட்டு ஆநிரைகளை பங்கள நாட்டவர் கவர அதனை போரிட்டு மீட்கும் பொருட்டு உயிரிழந்தான் என்பது இதன் பொருள்.
பங்கள நாட்டவர் வந்து இவர்கள் வைத்திருந்த மாடுகளை எல்லாம் களவாடி சென்றார்கள். அந்தக் காலத்தில் மாடுகள்தான் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அப்பேர்ப்பட்ட மாடுகளை களவாடி சென்றவர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காமுகன் மாடுகளை மீட்டுக்கொண்டு வர போரிட்டு சண்டையில் உயிரிழந்தார். அவருக்கானது இந்த நடுக்கல்.
இதனருகில் இன்னொரு நடுகல் இருக்கிறது. இந்த இரண்டு நடுக்கல்லுக்கு தொடர்புடையதா இல்லை வேற நடுக்கல்லா என்று தெரியவில்லை . இதில் ஒரு வீரர் கையில் ஒரு பெரிய வாள் வைத்திருக்கிறார் இன்னொரு கையில் அம்பு வைத்திருப்பது போல் சிற்பம் வீரரின் இடுப்பில் குத்துவாள் ஒன்றுள்ளது. இவர் இறந்து போகிறார், இந்த இறந்துபோன வீரனுடைய ஆன்மாவை இரண்டு தேவதைகள் வந்து அழைத்து செல்வது போல் சிற்பம் உள்ளது. அம்புக்கு பக்கத்தில் இரண்டு மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய குதிரையின் சிற்பம் உள்ளது. வீரர் இறந்தவுடன் அவருடைய மனைவி உடன்கட்டை ஏறுவது போன்ற சிற்பம் உள்ளது, அவர் கையில் கல் குடுவை உள்ளது.
நடுகல் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் வைக்கப்பட்டது.வரலாற்றுக் காலம் கிபி 1036. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறப்புமிக்க இந்த நடுகல் சோழர் காலத்தை சேர்ந்தது.
குறிப்பு :
இந்த நடுகல் இப்பொழுதும் வழிபாட்டில் இருக்கிறது அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் நடுகல் முன்பு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இந்த நடுகல்லுக்கு பலி கொடுத்து வழிபடுகின்றனர்.எந்த மாதம் என்று தெரியவில்லை.
“ வாழ்க தமிழ் வளர்க தமிழ் “