தமிழின் முழு நூலாகிய திருக்குறளுள் உணர்த்திய செய்திகள் எண்ணிலடங்கா. அதில் இசைத் தொழிலுக்கான கருவிகள் சிலவற்றையும் உணர்த்துகின்றார் திருவள்ளுவர். ஆனால், நால்வகை இசைக் கருவிகளுள் மூவகைக் கருவிகளையே மொழிந்துள்ளார். அவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவியாகும். வள்ளுவர் நூலில் பயின்று வந்த இசைக் கருவிகள் பறை, குழல், யாழ் என்ற மூவகைக் கருவிகளேயாம்.
அறைபறை அன்னர் சுயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள் 1076)
இக்குறட்பாவில் பறை என்னும் தோற் கருவியையும், அதை முழக்கும் தொழிலினையும் உணர்த்தியுள்ளார். இப் பறை என்னும் தோற் கருவி அரங்கிசைக்குப் பயன்படுத்தப் பெறுவதின்று. ஆனால், பறையர் பாடி மகிழும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் முழக்கப் பெறும்.
குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (குறள் 66)
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். (குறள் 279)
இவ்விரு பாடல்களிலும் முறையே துளைக்கருவியாகிய குழலும், நரம்புக் கருவியாகிய யாழும் உணர்த்தப்படுகின்றன. இரு பாடல்களாலும் இருவகைக் கருவிகளின் இன்ப நிலையையும் உணர்த்தப்படுகின்றது. குழலிசை யின்பத்தையும், யாழிசை யின்பத்தையும் வள்ளுவனார் துய்த்து இன்புற்றார் என்று கோடல் மிகவும் பொருத்த முடைத்தாகும்.
வள்ளுவப் பெருந்தகையார் உணர்த்திய பண்ணும், பாடற்றொழிலும், இசைக்கருவிகளும் தமிழின் வளத்தை, இசைத் தமிழ் வளத்தைப் பெருக்குவனவாக உள்ளன.
குறள் 66 விளக்கம்
புல்லாங் குழலின் இசையும் யாழின் இசையும் மிகச்சிறந்தது என்பார் குழந்தையின் மழலை மொழியை கேட்காதவர் என்று கூறுகிறார்.குழந்தையின் மழலை முன் அனைத்து இசை கருவியும் தோற்றுவிடும் என்று பொருள். Tamilar Thadam