தமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்

அசாமில் மட்டும் இருக்கும் காண்டாமிருத்தின் எச்சங்கள் நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கிறது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பள்ளி, பர்கூர், தொகரப்பள்ளி, வட ஆற்காடு மாவட்டம் பையம்பள்ளி போன்ற ஊர்களில் சாம்பல் மேடுகள் உள்ளன. இவற்றில் பையம்பள்ளியில் தான் முதல்முதலில் பயிறு பயிரிடப்பட்டது. இங்கு 1964ஆம் ஆண்டு எஸ்.ஆர்.ராவ் தலைமையில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்றன. அதில் கிடைத்த மிகவும் சுவாரசியமான பொருள் என்ன தெரியுமா? காண்டாமிருகத்தின் எலும்புகள்.தமிழகத்தில் காண்டாமிருகமா என்று ஆச்சர்யப்படுகிறீர்கள் இல்லையா? ஆடு, புள்ளி மான், கோழி, பன்றி, காட்டுப் பூனை, காண்டாமிருகம் என்று விதவிதமான விலங்குகளின் எலும்புகள் பையம்பள்ளி சாம்பல் மேட்டில் கிடைத்தன.

இரும்பு காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் பையம்பள்ளியில் தொடர்பு இருந்ததா என்று ஆராயத்தான் ஆய்வுகள் இங்கு தொடங்கப்பட்டன எனலாம். கிடைத்த பொருள்கள், படிமங்கள் கொண்டு புதிய கற்காலம் (காலம் 1 – 1 மீ ஆழம்) மற்றும் இரும்பு காலம் (காலம் 2- 1.5 முதல் 2 மீ ஆழம்) என பையம்பள்ளி அகழாய்வுப் பொருள்களை இரண்டாகப் பிரித்துள்ளனர். இதில் காலம் 1ஐச் சேர்ந்த பொருள்கள்நீண்ட கொம்புடைய கால்நடை விலங்கின் சுடுமண் சிற்பம், கல் தீட்டும் கருவி, கைகளால் வனையப்பட்ட சாம்பல் நிற மண் பாண்டங்கள் கிடைத்தன. இறுக்கப்பட்ட தரையில் கம்புகள் நடுவதற்காக அமைக்கப்பட்ட குழிகள் கொண்ட வட்ட வடிவிலான அமைப்புகள் இருந்தன. அதைக் கொண்டே இங்கு வீடுகள் தரையில் கம்புகள் நட்டு வட்டவடிவில் குடில்கள் போல அமைக்கப்பட்டிருக் கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் தான் விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. பையம்பள்ளியை ஒட்டி செழித்த சதுப்பு நிலக்காடுகள் இருந்திருக்கலாம் எனவும், அதில் காண்டாமிருகங்கள் உலவியிருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

2ஆம் கால 6 அடி ஆழத்தில் சுண்ணம் கொண்டு பூசப்பட்ட தரை, கம்பு நடும் குழிகள், ஜாடிகள், கத்தி, அரிவாள், ஆணிகள், சுடுமண்ணால் செய்யப் கற்கோடரிகள் பட்ட விலங்கு மற்றும் பறவை பொம்மைகள், போன்றவை கிடைத்தன. கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பானை ஒன்றில் எரிந்து போன ராகி, பச்சைப் பயிறு போன்றவையும் கிடைத்தன. இதில் சி-14 கரிம பகுப்பாய்வு சோதனைக் உட்படுத்தியதில் இங்கு புதிய கற்காலம் (காலம் 1) பொஆமு 1390 (+/-200) வாக்கில் இருக்கலாம் எனவும் இரும்பு காலம் (காலம் 2) பொஆமு 315 (+/- 100) வாக்கில் எனவும் கண்டறியப்பட்டது. காண்டாமிருகத்தின் எலும்புகளும், மான், பன்றி, ஆடு இவற்றின் எலும்புகளும் அருகருகே கிடைத்திருப்பதைக் கொண்டு, பையம் பள்ளி மக்கள் காட்டுக்கு இணக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது!

2021 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகரப்பள்ளி மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வில் பல வகை இரும்பு ஆயுதமும் ஈமப்பேழையும் கிடைத்தது. அதில் 70cm நீளத்தில் கிடைத்த கத்தியை அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பகுப்பாய்வு மையத்தில் AMS (Acceleration Mass Spectrometry) முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டது.அதன் வயது கி.மு 2172. தமிழ்நாட்டின் இரும்பின் காலம் 4200 ஆண்டுகள் முற்பட்டது. Mayilaadum parai excavation site