தமிழர்களின் வாணிக வரலாறு

உள்நாட்டு வாணிகத்திலும் கடல் வாணிகத்திலும் சிறப்புற்ற நாடே நாகரிக நாடு என்பது பொதுக் கருத்தாகும். வாணிகமே ஒரு நாட்டுச் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவுகோலாகும். கிறிஸ்துக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியர் கடல் வாணிகத்திற் சிறந்திருந்தனர் என்று அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்களைக் கொண்டும், புதை பொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர்கள் சிலவற்றைக் கூறுகின்றனர்.அவை..

கிறிஸ்துவுக்கு மூன்பு 

பொ.ஆ.மு 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை, யானைத்தந்தம், வாசனைப் பொருள்கள் முதலியன சென்றன.

ஈப்ரு மொழியிலுள்ள துகி என்பது தமிழ்த் தோகை என்பதாகும்; அகல் என்பது அகில் என்பதாகும்.

திமில் உடைய எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.

பொனீசியருடைய கப்பல்களில் சேரநாட்டு மிளகு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.தமிழ் வணிகர் கொண்டுசென்ற பொருள்களை அரேபியர் ஏடன் துறைமுகத்தில் பெற்று, ஆப்பிரிக்கருக்கு விற்றனர்.

பிலிப்பைன்ஸ் தீவுகளின் வடபகுதியில் தமிழ்நாட்டில் கிடைத்த இரும்புக்காலப் பொருள்கள் கிடைத்துள்ளது.அப்பண்டைக் காலத்திலேயே பிலிப்பைன்ஸ் தீவுகட்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கடல் வாணிகம் நடைபெற்றதென்பது தெளிவாகும்.

பொது ஆண்டுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பப்பட்ட அரிசி, மயில், சந்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் தமிழ் மொழிப் பெயர்களே, அப்பழைய காலத்தில் தமிழர் மேற்கொண்டிருந்த கடல் வாணிகச் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும்.’

பொ.ஆ.மு 606-இல் அசிரியப் பேரரசு மறைந்தது. பாபிலோன் நகரம் வாணிகத்தில் சிறந்த நகரமாய் மாறியது. யவனர், யூதர், பொனீசியர், தமிழர், சீனர் தங்கள் பொருள்களைக் கொண்டு சென்று, அந்நகரத்தில் விற்கலாயினர். அந்நகரத்தில் தென்னிந்திய வணிகர்கள் குடியேறினர். அக்குடியேற்றம் பொ.ஆ.பி 7-ஆம் நூற்றாண்டு வரையில் அந்நகரில் தொடர்ந்து இருந்து வந்தது.

அலெக்ஸாண்டரால் ஏற்படுத்தப்பட்ட அலெக்ஸாண்டரியா நகரம் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நடைபெற்ற கடல்வாணிகத்தில் சிறந்த பங்கு கொண்டது.

சூயஸ் கால்வாய் வழியாக வாணிகப் நடந்தது.இதனால் எகிப்தின் இழந்த வாணிகம் மீண்டும் ஏற்றத்தை கண்டது,தமிழர்களின் வேட்டை நாய், காளை மாடுகள், வாசனை திரவம் முதலியவை பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டது.