சந்திராபுரம் நடுகல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திராபுரம் என்ற ஊரில் ஏரிகொடி என்ற ஒரு சின்ன கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30 சிற்பங்களைக் கொண்ட மிகப்பெரிய நடுகல் உள்ளது இதனைப் பற்றிய விளக்கம் காண்போம்.

இரண்டு அங்குல கனமுள்ள  கற்பலகையில் இந்த உருவத்தை செதுக்கி இருக்கிறார்கள், இதனுடைய  நீளம்  மேற்பகுதியில் 102.5 அங்குலமும் கீழ்ப்பகுதியில் 91.75 அங்குலமும்  உயரம்  தெற்குபுறத்தில் 54.5 அங்குலமும் வடபுறத்தில் 87.5 அங்குலமும் உள்ளது.

நடுகல்லின் மையத்தில் இருக்கின்ற வீரனை சுற்றிதான் அனைத்து சிற்பங்களும் அமைந்துள்ளது.  அந்த வீரனின் சிற்பத்தின் உயரம் 46 அங்குலமும்  அகலம் 36 அங்குலமும் இருக்கின்றது.  வலது புறம் நான்கு தொகுதியும் இடதுபுறம் நான்கு தொகுதியும் உள்ளது.

வீரனின் வலது பக்கத்தின் மேல் பகுதியில் நான்கு குதிரைகள் வேகமாக ஓடும் மாதிரியான சிற்பங்கள் அமைந்துள்ளது. குதிரையின் கீழ் பக்கம் ஒரு பெண் அந்த வீரனை நோக்கி நிற்பதுபோல சிற்பம் உள்ளது. பெண் சிற்பத்திற்கு அருகில் ஒரு ஆடவன் காவடியை தூக்கி செல்வது போன்ற சிற்பம் உள்ளது. அதற்கு கீழே இரண்டு பேர் பல்லக்கை தூக்கி செல்வது போன்ற சிற்பம் உள்ளது. வலதுபுறம் கடைசியாக தரையை ஒட்டியது போல் நான்கு உருவங்கள் கொண்ட சிற்பம் உள்ளது, முதலில் ஒரு ஆண் கையில் வெண்கொற்றக்குடை  பிடித்து செல்வது போன்றும் அதனைத் தொடர்ந்து ஒரு குதிரையும் இரண்டு உருவங்கள் வெண்கொற்றக்குடை பிடித்து  செல்வது போன்ற சிற்பம் அமைந்துள்ளது.

இடது புறம் மேல் பகுதியில் ஒரு வீரன் உட்கார்ந்தும் அவருக்கு இருபுறமும்  பெண்கள் அமர்ந்து சாமரம் வீசுவது  போன்ற   ஒரு தொகுப்பு இடம்பெற்று உள்ளது. அதற்கு கீழே வீரர்கள் போரிடும்  காட்சி  துல்லியமாக செதுக்கி இருக்கிறார்கள் . போரிடும் சிற்பத்தில்  இடது புறம் நான்கு வீரர்கள் கையில் வில்லும் அம்பும் வைத்திருப்பதை போன்ற உருவங்கள் இருக்கின்றது. போர் சிற்பங்களுக்கு கீழ் மூன்று பேர் ஊதுகுழலை ஊதிக்கொண்டு முன்னோக்கி செல்கிறார்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஒருவர்  தாளம் போட்டுக்கொண்டு செல்வது  போன்ற சிற்பம் இடம் பெற்றுள்ளது. இடதுபுறம் தரையை ஒட்டிய சிற்பத்தில் நான்கு பேர் இருப்பது போன்ற சிற்பம் அமைந்துள்ளது  ஒருவர்  சேகண்டி வாசிப்பது போன்றும் மூன்று பேர் மத்தளம் வாசித்து செல்வது போன்ற சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.

 மற்றொரு நடுகல் :

 இந்தப் பெரிய நடுகல்லுக்கு  எதிராக மற்றொரு சிறிய நடுகல் அமையப்பெற்றுள்ளது. இந்த நடுகல் உயரம் 55 அங்குலமும் நீளம் 45 அங்குலமும், இதில் இருக்கக்கூடிய வீரனின் சிலை 37.5 அங்குல உயரமும் 28  அங்குல அகலம் உள்ளது.  இந்த வீரனுடைய வயிற்றுப் பகுதியில் ஒரு பெரிய அம்பு துளைத்துள்ளது. வீரனுடைய கையில் ஒரு மிகப்பெரிய வாள் வைத்திருக்கிறார், இந்த வீரனுடைய இடையின் கச்சையில் மற்றொரு வாளும்  கழுத்தில் இரண்டு சங்கிலியும்  காதுகளில் இரண்டு குண்டலமும் அணிந்திருக்கிறார், தலையில் பெரிய கொண்டை உள்ளது. இவர் போர்க்களத்தில் எப்படி இருந்தார்  என்பதற்கு சாட்சியாக தலையிலும் இடுப்பு பகுதியிலும் கால்களிலும் அம்பு பாய்ந்தது போன்று  இந்த நடுகல்லில் குறிப்பிடப்பட்டுள்ளது . நடுகல்லின்  மேற்பகுதியில் இறந்து போன வீரனுடைய ஆன்மாவை தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற சிற்பம் உள்ளது. இந்து நடுகல் கீழ்ப்பகுதியில் தரையை ஒட்டிய மாதிரி ஒரு சில சிற்பங்கள் அமைந்துள்ளது. இச்சிற்பங்கள்  மக்கள் ஊர்வலமாக செல்வது போன்று அமையப்பெற்றுள்ளது. இந்த நடுகல்லில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு நிகழ்வுகள் செதுக்கி இருக்கிறார்கள். 25 மனித உருவங்களும் 5 குதிரைகளும்  இடம்பெற்றிருக்கிறது.

கல்வெட்டு:

 இந்த நடுகல்லின் பக்கத்திலே ஒரு கல்வெட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது, 5 துண்டுகளாக உடைந்து உள்ளது, இந்த கல்வெட்டு 4 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்டது இதில் 21 வரிகள் பொறிக்கப்பட்டிருக்கிறது.  கல்வெட்டில்  வீரராஜேந்திர சோழனின் வீரமே துணையாக என்று இவருடைய மெய்க்கீர்த்தி முதல் வரியில் தொடங்குகிறது கூடல் சங்கமம் என்ற இடத்தில் ஆகவ மல்லன் என்ற சாலுக்கிய மன்னனை வென்று அவனுடைய மனைவியர் சொத்துக்கள் வாகனங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய செய்தியையும், விக்கலன் சிங்களர்களை வென்ற செய்தியையும், வேங்கை நாட்டை கைப்பற்றி தனது முன்னோர்கள் நினைத்ததை நிகழ்த்தி முடித்ததையும்  வீரராஜேந்திர சோழனின் மெய்க் கீர்த்தி விவரிக்கிறது. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் சந்திரபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இப்போதும்    இந்த ஊரின் பெயர்  சந்திரபுரம் தான். இந்த ஊர் விஜயராஜேந்திர மண்டலத்து தகடூர் நாட்டில் இருந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தகடூர் என்பது தற்பொழுது  தர்மபுரி மாவட்டத்தை குறிக்கிறது. வீரராஜேந்திர சோழனின் சேனாதிபதி மாவளி மும்முடி சோழ தேசத்து புறமலை நாட்டின் மீது போர் தொடுத்தபோது  இறந்ததாக தெரிகிறது. அவரை  சிறப்பிக்க இவ்வூரில் இருந்த ஏரிக்கு இராஜேந்திர சோழன் ஏரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிபி 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன் வீர இராஜேந்திரன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இந்த கல்வெட்டில் உள்ளது.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்”

Leave a Reply