அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில், ஒட்டன்சத்திரம்.
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து மேற்கே பழனி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந் துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சார்புக் கோயிலாக இக்கோயில் விளங்கி வருகின்றது. அருள்மிகு குழந்தை வேலப்பர் இத்திருக்கோயிலில் மயில்மீதமர்ந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றார். மயில் வாகனத்துடன் கூடிய அருள்மிகு குழந்தை வேலப்பரின் உருவத்திருமேனி ஒரே கற்சிலையால் ஆனது.
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலின் தென்புறமாக மலைக் கோயில் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலைக் கோயிலுக்குச் செல்லத் தொடக்க காலத்தில் நிறுவப்பட்ட கற்களாலான படிகள் உள்ளன. இம்மலைக் கோயிலில் முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இம்மலைக்கோயிலிலிருந்து நூறு அடி தூரத்தில் தெற்குப் புறமாகக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது.
பழனித் திருக்கோயில் நிர்வாகம் பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவின் போது திருத்தலப் பயணம் வரும் அடியார்கள் தங்கும் பொருட்டு இத்திருக்கோயிலில் ஒரு காவடி மண்டபத்தையும், இரு திருமண மண்டபங்களையும் கட்டியுள்ளது. அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு விழா, ஆடிப்பதினெட்டாம் பெருக்கு விழா, கந்தர்சஷ்டி விழா திருக்கார்த்திகை விழா, தைப்பூசத்திருவிழா, பங்குனி உத்திர விழா முதலிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. பழனி மற்றும் ஒட்டன் சத்திரம் வட்டார மக்கள் இக்கோயில் வழிபாட்டிலும், திருவிழாக்களிலும் பெரும் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
தமிழ்ப்புத்தாண்டு நாளன்று இவ்வட்டாரத்தில் வாழும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களைக் கொண்டு வந்து கோயிலில் சூறைவிட்டு வழிபடுகின்றனர்.
ஆடிப்பதினெட்டாம் பெருக்கு நாளன்று இவ்வட்டார மக்கள் விருப்பாச்சிக்கு அருகில் உள்ள தலையூத்து அருவியில் நீராடிவிட்டு, அருள்மிகு குழந்தை வேலப்பரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
பழனி முருகன் கோயில் தைப்பூசத்திருவிழாவின் போது திருத்தலப் பயணம் வரும் அடியார்கள் இக்கோயில் வளாகத்தில் தங்கி முதன் முதலில் அருள்மிகு குழந்தை வேலப்பரை வழிபடுகின்றனர். மேலும், திருத்தலப்பயணம் வரும் அடியார்கள் குழந்தை வரம் வேண்டி குழந்தை வேலப்பரை வேண்டிக் – கொள்கிறார்கள். வேண்டிக் கொண்ட அடியார்கள் குழந்தைகள் குழந்தை விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளைக் வேலப்பருக்குக் காணிக்கையாக அளிக்கிறார்கள். பின்னர் அடியார்கள் அனைவருக்கும் இனிப்பு வகைகளை அள்ளி அள்ளி அன்புடன் வழங்குகிறார்கள். பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது இவ்வட்டார மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடிக்குச் சென்று காவிரியாற்றுத் தீர்த்தம் கொணர்ந்து குழந்தை வேலப்பருக்கு நீராட்டுச் செய்து வழிபடுகின்றனர். அருள்மிகு குழந்தை வேலப்பர் இத்திருக்கோயிலில் குழந்தை வரம் அளித்தும் குழந்தைகளைப் பிடித்திருந்த நோய்களைத் தீர்த்துவைத்தும் அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் ஆற்றல் மிக்க தெய்வமாக விளங்கி வருகின்றார்.