உலகிலேயே மிகவும் பழமையுடைய இசை தமிழர் இசையே, தமிழரின் இசையையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும், கிளைப் பண்களையும் வகுத்தும்,பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும்,கருநாடக சங்கீதம்’ எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.
கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்த் திருத்தலைக் காணுங்கள்.
குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும், தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை)யும் கண்டு, ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப் பண்களைத் திரித்ததுமன்றி, அப்பன்னீரிசையையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர்.
பேரிசை ஏழாவன : குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பவையாகும்.சிற்றிசையை ஆகணம் என்றும்,குரலும் இளியுமல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.