கிரீட் தீவில் தமிழ் கடவுள் முருகனின் வழிபாடு

உலகம் முழுவதும் தமிழ் கடவுள் முருகனின் வழிபாடு உள்ளது என்பதற்கு இந் தகவல் முக்கிய சான்று.

கிரீட் தீவில் வாழ்ந்த மினோயர்களது வழிபாடில் தாய் தெய்வம் ஒன்றுக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது. சில கல்வெட்டுகளில் இந்தத் தெய்வத்தை கடவுளர்களின் தலைவனான ஜீயஸின் மனைவியாகச் சித்திரித்திருந்தனர்.இவர்களுக்கு மகனாக ஒரு தெய்வத்தையும் மினோயர்கள் வழிபட்டனர்.

இந்த மகன் தெய்வத்துக்கு உள்ள சிறப்புப் பெயர்களில் இளவல் ஜீயஸ் (Boy Zeus) என்பதும் ஒன்று.’ இளவல் என்பதற்கு இளையவன் என்று பொருள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தெய்வங்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு தலைவன்,தலைவி, இவர்களுக்கு ஒரு பிரியமான மகன், அவன் என்றும் இளமை உடையவன். இத்தகைய ஒரு தெய்வத்துக்கு மினோயர்கள் வைத்த பெயர்… வியப்படைய வைக்கிறது! வேல் கண்ணன்.

கிரேக்கர்கள் இதனை வேல் கானோஸ் (Vel chanos) என்று அழைத்தார்கள். இந்தத் தெய்வம் நமது தமிழ்க் கடவுளான வேலனே.

வேலனை மினோயர்கள் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் எவ்வாறு வடித்தார்கள் தெரியுமா? ஒரு பெரிய மரத்தின் கிளைமீது ஓர் இளைஞன் அமர்ந்திருப்பதுபோலவும் காலடியில் ஒரு சேவல் அமர்ந்திருப்பது போலவும் வடித்தார்கள்.’ பைஸ்டோஸ் என்ற இடத்தில் இவ்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.

தமிழ்க் கடவுள் முருகனும் ஔவையோடு விளையாடியபோது மரக்கிளையில் வீற்றிருக்கும் சிறுவனாகக் காட்சியளித்தான் என்பது நினைவுகூரத்தக்கது. எனவே, மேற்கண்ட மினோய நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது தமிழ்க் கடவுளான முருகனின் வடிவம்தான்.

தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை உணர்த்தியதால் தகப்பன் சாமி என்று அழைக்கப்படுவதையும், கிரீட்டில் வேல் கானோஸ் இளவல் ஜீயஸ் என்று அழைக்கப்படுவதையும் காணும்போது இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை மேலும் வலுப்படுகிறது.

கிரேக்கம், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இன்றும் வேல் கானோஸ் திருவிழா என்று,ஒரு இளைஞர்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கிராமத்துச் சிறுவனாக, மரத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் வேல் கானோஸ் என்றும்,இத்தெய்வம் இளவரசனைப் (இராச அலங்காரம்) போலச் சித்திரிக்கப்படும்போது இவரது பெயர் குரோஸ் (Kouros) என்றும் அழைப்பார்கள். குமர் என்ற சொல்லின் திரிபே குரோஸ். கிரேக்கர்களின் வழக்கமே இது, வேற்று மொழிச் சொற்களைக் கையாளும்போது அவற்றின் இறுதியில் OS அல்லது ous என்று சேர்த்துவிடுவார்கள்.

உதாரணமாக புருஷோத்தமன் என்பதை போரஸ் என்றும் சந்திரகுப்தன் என்பதை சாண்ட்ரகோட்ஸ் என்றும் குறிப்பிடுவார்கள். அப்படித்தான் குமர்,குமரன் என்று சொல் குரோஸ் என்று ஆகியுள்ளது.

கிரேக்க மற்றும் மினோயப் புராணங்களின்படி குரோஸ்தான் தேவர்களின் படைத்தளபதி.‘ குமரனும் தேவசேனாதிபதி. குரோஸின் கோவில்கள் மலைக் குகைகளிலேயே பெரிதும் காணப்படுகின்றன. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக நாம் வழிபடுகிறோம்.

உலகம் முழுவதும் முருகனின் வழிபாடு உள்ளது.