இதுலயும் சோழர்கள்தான் Top🔥🔥

சோழர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வித்தியாசமான நகைகள்

பெண்கள் அணிந்திருந்த அணிகலன்களின் வகைகளுக்கும், அழகுக்கும், மதிப்புக்கும் அளவு காண முடியாது. இலக்கியக் குறிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டும் பெண்கள் பூண்டிருந்த அணிகலன்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அணிகள்யாவும் பொன்னால் செய்யப்பட்டவை; ஒன்பது மணிகள் பதித்தவை. சோழ அரசர்கள் கோயில்களில் உள்ள அம்மன் சிற்பங்களுக்கு வழங்கிய தங்க நகைகள் முத்தாலும்,பவழத்தாலும் மணிகளாலும் இழைத்தவை. அரசிகள் நெத்திச்சுட்டி, தெய்வ உத்தி பொற்பூ ஆகிய தலையணிகளையும், நெற்றியில் சூட்டு, காதுகளில் மகரக்குழை, கழுத்தில் முத்துமாலை, பிறைவடம், நட்சத்திர மணி மாலை, வலம்புரிமுத்துகள் கோத்த வடம், நிரைத்தாலி, மாணிக்கத் தாலி, தாலிமணிவடம் ஆகியவை அணிந்தனர். சுறாமீன் வடிவமுள்ள தோளணி, மகரமீன் வடிவமான குறங்கு (துடை) செறி, பவழ மேகலை, பாதங்களில் தவளைக் கிண்கிணி, பாடகம், சிலம்பு, விரலாழிகள் ஆகியவும் பெண்களை அணிசெய்தன.சோழ நாட்டில் பொன்னுக்கும், மணிக்கும் பஞ்சமே இல்லை. நாடெங்கும் அவை மலிந்து காணப்பட்டன. சோழர்கள் பகை வரை வென்று அவர்களிடமிருந்து கவர்ந்துவந்த பொன்னும் மணியும் மக்கள் கைகளில் குவிந்துகிடந்தன.