ஆசீவகம் விளக்கம்

ஆசு+ஈவு+அகம்

ஆசீவக சின்னம்

ஆசு பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென. 

ஈவு தீர்வு

அகம் தருமிடம் என்பதே ஆசீவகமாகும். 

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.

ஆசீவகம் பற்றி… 

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் நமக்கெனத் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இவர்கள் மலைக்குன்றுகளில் உள்ள இயற்கைக் குகைகளில் கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும் வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது.

எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக்கொடியில் கோர்க்கப்படும் மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும், கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத்தக்கது) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது. கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆசீவகத் துறவிகளின் எச்சமாக இருக்கும் சித்தர் பீடங்கள், குருகுலங்கள் மீண்டும் தமது பணியைப் பொது நலம் கருதித் தொடர வேண்டும் எனவும், பொது மக்களையும் அரசமைப்புகளையும் குறை சொல்லிக் கொண்டு, அயனாட்டுப் பண்பாட்டு மோகம் கொண்டு அலையும் இளைஞர் சமுதாயம், தனது பொறுப்புணர்ந்து சுற்றுச் சூழல், பல்லுயிர் ஓம்பல், ஒழுகலாறு, நெறியாண்மை போன்றவற்றில் தனது கவனத்தைத் திருப்பித் தொன்றமிழ் நாட்டின் அருகி வரும் கலைகளைப் புதுக்கித் தருவதில் பங்களிப்பைத் தர வருக எனவும் அழைக்கின்றோம்.

இதனை ஒப்புக் கொள்ளும் யாவரும், தமது இல்லத்தி ஆசீவகச் சின்னங்களை வரைய கேட்டுகொள்கிறேன்🙏.

1. திருநிலை 

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண்ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப்படுகிறது. இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும் இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர் இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசிவக மரபிற்கு சான்று பகரும் ஆவணமாக உள்ளது.

2.சுழற்குறி 

துறவு நிலையில் கொல்லாமை, அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவிகளுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை “ஸ்வஸ்திக்” என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர் 

இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடைமொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப்பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம், இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஒக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் ஆதாரக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும் காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கிப் பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24 ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாகச் சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தாவிட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது. ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

3.கந்தழி 

ஒரு நடுவப்புள்ளியில் தொடங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம். உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக்

கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (Infinite) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் யக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது. வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப்பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப்படுவதும் உண்டு.

4.இருபுற முத்தலைக்கோல் 

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு தொடங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும் அவ்வழக்கம் இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடித்து இதை வருகின்றனர்.

இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள “ய” கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள “ய” கரம் தக்க காரணத்திர்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும் கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.

 5.முப்புள்ளி 

அஃஉ எனும் குறியீடு கொண்டது. இச்சின்னம் மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும் இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்.

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஒகக் குறியீடே. இகரத்தில் இ என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் நெடிலாகிய “ஈ” கரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப்படுகின்றன. 

அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் தொடங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ, ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு) ஒன்று, இரண்டு ஆக உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும் இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது. பிள்ளையார் சுழியுடன் எழுதத் தொடங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.